Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே
பிலிக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் (60).
இவர் அப்பகுதியில் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. நேற்று இரவு இருவரும் வீட்டில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கொள்ளையர்கள் வைரவனையும், அவரது மனைவி பூங்கொடியையும் தாக்கி, இருவரையும் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் சென்ற பின்னர், கட்டுகளை அவிழ்த்துக் கொண்ட தம்பதி சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற பாதை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பிலிக்கல்பாளையம் பகுதி பரமத்தி வேலூர் வட்டத்தில் முக்கிய வெல்ல உற்பத்தி மற்றும் விற்பனை மையமாக உள்ளது. இப்பகுதியில் பல வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பிலிக்கல்பாளையத்தில் வெல்ல ஏலச் சந்தையும் நடைபெற்று வருகிறது.
இதனால் வியாபாரிகளிடம் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும் நிலையில், இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam