தொகுதி மறுவரையறை ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பேராபத்து – வைகோ பேட்டி
நெல்லை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வர முயற்சிக
Vaiko


நெல்லை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுவரையறை தேவையில்லாத ஒன்று என்றும், இதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், எந்தக் கட்சியும் இதற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் வைகோ கேட்டுக்கொண்டார். தொகுதி மறுவரையறை நடைபெற்றால் ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சி அமைப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியாக இருப்பதாகவும் வைகோ பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்ட துறையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதற்காக நற்சான்று வழங்குவேன் என்றும் வைகோ தெரிவித்தார். அதேநேரத்தில், சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்பது தனது கருத்து என்றும் கூறினார்.

காவிரி நீரை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வைகோ குற்றம்சாட்டினார். காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாகவும், தமிழகத்தின் நலனுக்கு எதிராக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் எழுந்தபோது கர்நாடக எல்லையில் அறப்போராட்டம் நடத்தியதாகவும் வைகோ நினைவுகூர்ந்தார். காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துகளை தமிழக அரசின் கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வைகோ தெரிவித்தார். அமைச்சரவையில் இருப்பவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பதவி விலகுவோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, இது தமிழக முதலமைச்சரின் கருத்தாக இருக்காது என்றும், அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

அகில இந்திய அளவில் நடைபெறும் அடுத்த தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும் வைகோ தெரிவித்தார்.

மேலும், பெரியார், அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் விடுபட்ட விவகாரத்தில் யார் காரணமாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / ANANDHAN