Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான புதிய கொள்முதல் விலை நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2600 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2750 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையும் சேர்த்து இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் காவிரி டெல்டா உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விலையின் படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நாளை முதல் நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கு கொள்முதல் செய்த 24 மணி நேரத்திற்குள் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நெல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும் என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b