Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் ஒரே மாதத்தில் இருவரை கொன்ற புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் 11-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புலி நடமாட்டம் காரணமாக லாரஸ்டன் மற்றும் டிவிஷன்-4 கிராமப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருந்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் வனத்துறை வாகனங்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, லாரஸ்டன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 41 மாணவ, மாணவிகள் இரண்டு வனத்துறை வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள், மாலை பள்ளி முடிந்ததும் மீண்டும் அதே வாகனங்களில் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
புலி பிடிபடும் வரை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam