கிரேட்டர் நொய்டாவில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை- ஓட்டுநர், நடத்துநர் கைது
நொய்டா, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றபோது, ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளித்த புகாரின் பேரில், பேருந்து ஓட
பாலியல் தொல்லை


நொய்டா, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றபோது, ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளித்த புகாரின் பேரில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

11-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, நொய்டா செக்டர் 63-ல் வசிக்கும் உறவினரை சந்திப்பதற்காக மெயின்புரியில் இருந்து புறப்பட்டுள்ளார்.

கனமழை மற்றும் இருள் காரணமாக தவறுதலாக கிரேட்டர் நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் இறங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் இல்லாத ஸ்லீப்பர் பேருந்தை நிறுத்தி, நொய்டா செக்டர் 63 செல்வது குறித்து சிறுமி கேட்டுள்ளார்.

பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39), நடத்துநர் சந்தீப் (26) ஆகியோர் பேருந்து செக்டர் 63 நோக்கிச் செல்வதாகக் கூறி சிறுமியை பேருந்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நடத்துநர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கிரேட்டர் நொய்டாவில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் பயணித்த பேருந்து, டெல்லியின் காஷ்மீரி கேட் அருகே சென்றபோது, ரிங் ரோடு பகுதியில் சிறுமியை இறக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமி காஷ்மீரி கேட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குல்தீப் மற்றும் சந்தீப்பை கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஸ்லீப்பர் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பேருந்து சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P