Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் , தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
போராடுவதற்கு முறையான இடம் கிடைக்காமல் தூய்மைப் பணியாளர்கள் சிரமப்பட்டு வந்ததை அரசு கவனத்தில் கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஏதுவாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுவதற்கு இடம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அமைச்சர், தூய்மைப் பணியாளர்களை வெறும் பணியாளர்களாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும், இந்த சமூகத்தை தூய்மையாக வைத்திருக்கும் தூய்மைத் தேவதைகள் அவர்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களின் உழைப்பும் தியாகமும் அளப்பரியது என்று புகழாரம் சூட்டினார்.
அதேவேளையில், அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவிதமான அடக்குமுறையையோ அல்லது பலப்பிரயோகத்தையோ காவல்துறை மேற்கொள்ளக்கூடாது என்று காவல்துறைக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு தொடர்பாக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b