Enter your Email Address to subscribe to our newsletters

அமிர்தசரஸ் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்த 22 வயது வாலிபர், மனைவியின் சகோதரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தரன் பகுதியை சேர்ந்த ஜக்ஜித் சிங் என்பவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஜக்ஜித் சிங், அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜக்ஜித் சிங் மீது கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று பெண்ணின் தாய், ஜக்ஜித் சிங்கை பேருந்து நிலையத்திற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.
அங்கு ஏற்கனவே காத்திருந்த பெண்ணின் சகோதரர்களான ஜஸ்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகியோர் ஜக்ஜித் சிங்கை கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜக்ஜித் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் ஜஸ்பிரீத் சிங்கை கைது செய்தனர். ஹர்பிரீத் சிங் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதால், இதனை ஆணவக்கொலை என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA