புழல் அருகே தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை பரிதாப பலி
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஹரி பிரகாஷ். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், சுமித்ராவுக்கும் யோகமாயா என்ற 1 வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், ஹரி பிரகாஷ் வழக்கம்போல் ஆட்டோ சவாரிக்காக வெளியே
Baby


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஹரி பிரகாஷ். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், சுமித்ராவுக்கும் யோகமாயா என்ற 1 வயது பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், ஹரி பிரகாஷ் வழக்கம்போல் ஆட்டோ சவாரிக்காக வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் சுமித்ரா சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, யோகமாயா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை வீட்டின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்ததாக தெரிகிறது.

குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் அதிர்ச்சியடைந்த சுமித்ரா, வீட்டின் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளார்.

அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்த நிலையில், மயக்கமடைந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே யோகமாயா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த புழல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 6-ம் தேதி யோகமாயாவின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ