Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையின் பிரபல சுற்றுலா தலமான மெரினா கடற்கரை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரை மணல் பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 500 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது, இதன் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்பது குறித்தும், இதுவரை யார் யாருக்கு விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / vidya.b