Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் அரிசிபாளையம் குணபால ராமசாமி தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது வீட்டின் தண்ணீர் குழாயைத் திறந்தபோது தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் மேல் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டிகளைச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது இரண்டு தண்ணீர் தொட்டிகளிலும் தலா ஒரு மூட்டை இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மூட்டையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் மனித உடலின் கை, கால்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், இரண்டு தண்ணீர் தொட்டிகளையும் திறந்து சோதனை செய்தனர். அப்போது இரண்டு மூட்டைகளிலும் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மூட்டையில் தலை மற்றும் உடலும், மற்றொரு மூட்டையில் கை, கால்களும் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடல் பாகங்களை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், உடல் பாகங்கள் தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P