Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தஞ்சாவூரை சேர்ந்த கணேஷ் முத்தையா என்பவர் ’Madras Crocodile Bank Trust’ அமைப்பின் அறங்காவலராக உள்ளார். இவர் ’Temple of REPTILES’ நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
இந்நிலையில் ’Save The REPTILES’ என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த பிரச்சாரத்தில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம், 117 நாட்கள் தனது இருசக்கர வாகனத்தில் செல்கிறார்.
அப்போது பள்ளி, கல்லூரிகள், காவல் துறை உயர் அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோரை சந்தித்து ஊர்வன உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து கணேஷ் முத்தையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
”உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தனித்தனி பங்கு உண்டு. மனிதர்களுக்கும், ஊர்வன உயிரினங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு, இதை நாம் உணர்வதில்லை.
இதை புரிய வைப்பதுதான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கமாகும். மேலும் ‘Madras Crocodile Bank Trust’இன் 50வது வருடத்தை முன்னிட்டு இந்த பயணம் பெரிதாக பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் ’Temple Of REPTILES’ விலங்கு காட்சி சாலை விரைவில் வர உள்ளது.
இதற்கு தமிழ்நாடு வனத்துறை பரிந்துரையின் பேரில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை ஐஐடி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த விலங்கு காட்சி சாலை அமைய உள்ளது. காவிரி பகுதியில் வசிக்கும் ஊர்வன உயிரினங்கள் மட்டுமல்லாமல், இதில் 40 வகையான ஊர்வன உயிரினங்கள் வரவுள்ளன.
அதில் 20 வகையான பாம்புகள், 10 வகையான முதலைகள், பல்லி இன வகைகள், நிலத்திலும், தண்ணீரிலும் இருக்கக்கூடிய ஆமைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய நிறைய உயிரினங்களை காப்பாற்றுவதற்கு விலங்கு காட்சி சாலை தயாராகி வருகிறது” என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN