Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானத்தை உடனடியாக தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர். கமலநாதன் மற்றும் செயலாளர் ஜெ.பொதிராஜ் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சிவஞானம் சுமார் 34 ஆண்டுகள் இந்திய நீதித்துறையில் பணியாற்றியவர் என்றும், 2025 ஜூலை முதல் உச்சநீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் குழுவுடன் நேபாளத்துக்கு சென்றிருந்தபோது அங்கு பேரிடர் ஏற்பட்டதாகவும், ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவால் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு, இடிபாடுகள் மற்றும் தகவல் தொடர்பு பாதிப்பு காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி சிவஞானத்தை கண்டறிய இந்திய அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், நேபாள அரசு, அந்நாட்டு காவல்துறை, உள்ளூர் மீட்புக் குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினருடன் ஒருங்கிணைந்து தேடுதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகள், மீட்பு முகாம்கள், தங்குமிடங்கள், வெளியேற்ற மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடத்த வேண்டும் என்றும், அடையாளம் காணப்படாத நபர்கள் குறித்த பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்களை ஆய்வு செய்து நீதிபதி சிவஞானத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் இந்தியாவின் தேடுதல் மற்றும் மீட்பு, தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி நேபாள அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் பார் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேடுதல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிபதி சிவஞானத்தின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும், குடும்பத்தினருக்காக பிரத்யேக தொடர்பு மையம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சிவஞானத்தை பாதுகாப்பாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை அனைத்து சாத்தியமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மெட்ராஸ் பார் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN