கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறு
TTV Dhinakaran asks.


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?

பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b