த.வெ.க எம்.எல்.ஏவின் ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர் அறிவிப்பு
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா, ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்காகப் பல கோடிகளைக் கொட்டுவதற்குப் பதிலாக, மூடப்பட்டிருக்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்
TVK MLA's controversial remarks on Jallikattu expunged


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா, ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்காகப் பல கோடிகளைக் கொட்டுவதற்குப் பதிலாக, மூடப்பட்டிருக்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க அந்தப் பணத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்போது, பல கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிப்பதாக அவர் கூறிய வார்த்தைகள் விவாதப் பொருளாகின.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, த.வெ.க எம்.எல்.ஏ-வின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் அதிமுக சார்பில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை இழிவுபடுத்திய எம்.எல்.ஏ தனது பேச்சை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து தனது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வருத்தம் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது.

பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ எம்.வி. கருப்பையா, ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாகப் பேசிய கருத்து இன்று (ஆகஸ்ட் 31) அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஜல்லிக்கட்டு மீதான பொதுமக்களின் உணர்வுகளையும், கலாசார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b