Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் வேப்பல சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ்–ஜோதி தம்பதியினரின் மகள், அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இதேபோல், ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் ராவ்–ரமா தம்பதியினரின் மகன் ரோகித்தும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்தை சொந்த ஊரில் நடத்த இருவீட்டு பெற்றோர்களும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விசா தொடர்பான பிரச்சினை காரணமாக பெற்றோர்களால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், மணமக்கள் இருவருக்கும் அமெரிக்காவிலேயே திருமணம் நடத்தப்பட்டது. தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நேரில் காண முடியவில்லையே என்று இருவீட்டு பெற்றோர்களும் கவலை அடைந்தனர்.
இதையடுத்து, திருமண விழா முழுவதும் ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்தபடியே தங்களது பிள்ளைகளின் திருமணத்தை ஆன்லைன் மூலம் பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
திருமண நிகழ்ச்சியின்போது மணமக்களை ஆன்லைன் திரை வழியாக பார்த்து, அட்சதை தூவி ஆசி வழங்கினர்.
நேரில் திருமண விழாவில் பங்கேற்க முடியாத நிலையில், தொழில்நுட்பத்தின் உதவியால் தங்களது பிள்ளைகளின் திருமணத்தை கண்டு மகிழ்ந்து, அவர்களை ஆசீர்வதித்த சம்பவம் இருவீட்டு குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA