Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)
நிரந்தர அரசு பணி வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், அரசுத் துறைக்கு 4 ஏக்கர் நிலத்தை எந்தவித பணமும் பெறாமல் வழங்கியதாகக் கூறி, அதற்கு ஈடாக அரசு வேலை கேட்டு கடந்த 23 ஆண்டுகளாக போராடி வரும் 50 வயதுடைய ஒருவர், இதுவரை அளித்த 220 மனுக்களையும் சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துவந்து 221-வது முறையாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (50). அரசுத் துறைக்கு 4 ஏக்கர் நிலத்தை பணம் எதுவும் பெறாமல் வழங்கியதாகவும், அப்போது தனக்கு நிரந்தர அரசு பணி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி இதுவரை தனக்கு அரசு பணி வழங்கப்படவில்லை எனக் கூறி, கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து மனு அளித்து போராடி வருவதாக திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதுவரை பல்வேறு அதிகாரிகளிடம் அளித்த 220 மனுக்களின் நகல்களையும் அவர் பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில், 221-வது முறையாக தனது கோரிக்கை தொடர்பாக மனு அளிப்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், இதுவரை அளித்த 220 மனுக்களையும் ஒரு சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துவந்தார்.
சாக்கு மூட்டையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருநாவுக்கரசுவைப் பார்த்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொண்டுவந்த மனுக்களை போலீஸார் வாங்கி வைத்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதனைச் சந்தித்து தனது கோரிக்கை மனுவை அளிப்பதற்காக திருநாவுக்கரசுவை அனுப்பி வைத்தனர்.
23 ஆண்டுகளாக அரசு பணிக்காக தொடர்ந்து மனு அளித்து வரும் நிலையில், தனது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ