Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கொடிபட்டம் யானை மீது வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடத்தப்பட்டது.
தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து காலை 5.15 மணியளவில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வின்போது கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், “அரோகரா... அரோகரா...” என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி முழக்கத்தால் அதிர்ந்தது.
12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் வீதி உலா தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து உழவாரப் பணி நடைபெறுகிறது. இரவு ஸ்ரீபெலி நாயகர், அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும் செப்டம்பர் 4-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். மறுநாள் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி ரதத்திலும் வீதி உலா நடைபெறுகிறது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் வாகன வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்டம்பர் 9-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு தினமும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ