அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை காலை 5 மணி முதல் அமலுக்கு வரும் செல்போன் தடை
திருவண்ணாமலை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வர
Tiruvannamalai Temple


திருவண்ணாமலை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டு காலமாகவே அண்ணாமலையார் தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள், பொது மக்கள் ஆன்மீகவாதிகள் என பல தரப்பட்ட மக்களின் வருகை அதிகரித்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநில பக்தர்கள் வருகையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

பக்தர்களின் வருகை ஒருபுறம் இருக்க உள்ளே வருகின்ற பக்தர்கள் தங்கள் கைப்பேசியை கொண்டு பல்வேறு இடங்களில் செல்பி எடுப்பது ரீல்ஸ் போடுவது அதுமட்டுமின்றி அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் கருவறையில் உள்ள தெய்வங்களை படம் பிடிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரிய வகை கோவில் சிற்பங்களை படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்கள் அதிகரித்து இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது, அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 1 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய செல்போனை கோவிலின் பிரதான கோபுரங்களான ராஜகோபுரம், வடக்கு கோபுரம், தெற்கு கோபுரம் என 3 கோபுர வாசலில் முன் பகுதியில் 5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு வைப்பறைகள் அமைக்கப்பட்டு அதில் கட்டணமாக 5 ரூபாய் செலுத்தி தங்களை செல்போனை பத்திரமாக வைத்து விட்டு அதற்கான டோக்கன் வாங்கி செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக செல்போன் பாதுகாப்பு மையத்தில் 5 ரூபாய் கட்டணம் செலுத்திய உடன் பக்தரின் புகைப்படத்துடன் கூடிய ரசீது வழங்கப்படும், அந்த ரசீதில் அவரது செல்ஃபோன் இடம்பெறும், தொடர்ந்து சாமி தரிசனம் முடிந்த பிறகு டோக்கனை காட்டி மீண்டும் தங்களது செல்போனை பக்தர்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அதற்கான செல்போன் பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு வசதிகள் தயார் நிலையில் உள்ளது

குறிப்பாக ஒவ்வொரு பாதுகாப்பு மையத்திலும் சுமார் 72 அறைகள் கொண்ட 14 பெட்டிகள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது, சுமாராக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைக்கும் அளவிற்கு மூன்று பிரதான கோபுர வாயில்களின் வெளியே 5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தயார் நிலையில் உள்ளது.

பக்தர்கள் 5 ரூபாய் கட்டணத்தை கட்டணமாக மட்டுமே வழங்க முடியும் என்றும், ஜிபே, டிஜிட்டல் பணவர்த்தனை உள்ளிட்டவைகளில் 5 ரூபாயை கட்டணமாக வழங்க முடியாது என்றும் கோவில் நிர்வாகத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN