Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட விளையாட்டு நகரத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டதாகக் கூறி சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சோழிங்கநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட செம்மஞ்சேரியில் சுமார் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஒப்பந்தப் பணிகளுக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போதைய தவெக அரசு அந்த பணி ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்மஞ்சேரியில் 112 ஏக்கரில் ரூ.206 கோடியில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஆர்.பி.பி இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி ஆணையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது போலவே, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டமான செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டத்தையும் இந்த அரசு ரத்து செய்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தமிழக இளைஞர்களின் விளையாட்டு எதிர்காலத்தை பாதிக்கும் இந்த முடிவுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில் அரசு தரப்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும், முதல்கட்ட திட்ட வடிவமைப்பு எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் போன்ற மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதால் தான் பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரே வளாகத்தில் நடத்தக்கூடிய வகையில் இன்னும் பிரமாண்டமான ஒருங்கிணைந்த சர்வதேச விளையாட்டு நகரமாக மறுவடிவமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b