Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில், சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் மேகதாது அணை திட்டம் என்பது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும் எதிரானது என்பது தமிழக அரசின் வாதமாகும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு மற்றும் மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, மேகதாது அணைக்கு அனுமதி அளித்தால் அது தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் செயலாகும் என வாதிட்டனர். மறுபுறம் கர்நாடக அரசு தரப்பில், மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், குடிநீர் தேவைக்காகவே இந்த அணை கட்டப்படுகிறது என்றும் வாதிடப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b