Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு அணைகள் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்ட காவிரி நீர் தற்போது தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி உள்ளிட்ட கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட இந்த தண்ணீர் பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக தமிழகம் வந்தடைந்தது.
தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்த நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வரத்து அடுத்த சில மணி நேரங்களில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து வரும் இந்த நீர் மாயனூர் கதவணை, திருச்சி மேலணை, கல்லணை வழியாக பாய்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b