உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் சாலை மறியல் - பலர் கைது
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க தொண்டர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத
DMK cadres stage road blockade


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க தொண்டர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கிய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதேபோல், புதுக்கோட்டையில் திரண்ட ஏராளமான தி.மு.கவினர், உதயநிதி கைதுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டிய அவர்கள், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தலைநகர் சென்னையில், அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனாம்பேட்டை சிக்னல் அருகே தி.மு.க தொண்டர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

காஞ்சிபுரத்தில் பெரியார் தூண் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற தி.மு.கவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b