Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
இன்ஸ்டாகிராமிற்குத் தணிக்கைக் குழு அவசியம் எனஇயக்குநர் சீனு ராமசாமிதெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்தனது எக்ஸ் தளத்தில்,
இன்ஸ்டாகிராமிற்குத் தணிக்கைக் குழு அவசியம் (சமூக நலன் கருதி வெளியீடு)
அன்பானவர்களுக்கு வணக்கம்,
எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அவையெல்லாம் இந்த வலைதளங்களில் ‘Trending’ ஆவதில்லை என்பதை நானும் சிந்தித்துப் பார்க்கிறேன்.
தாங்கள் செய்யும் நற்பணிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் பலர் அதை விளம்பர தேடல் என கருத்து சொல்பவர்கள் கூட அவர்கள் செய்யும் தர்மத்தையும் நன்மைகளையும் மறுத்து விட முடியாது.
ஆனால், அவையெல்லாம் பெரிய அளவில் கவனம் பெறுவதில்லை.
நேர்மறையான விஷயங்களை விட, அதிர்ச்சியூட்டும் எதிர்மறையான விஷயங்களே மனித கவனத்தை உடனே ஈர்க்கின்றன என்பது எனக்கு வியப்பிலும் வியப்பாக இருக்கிறது
மனித மனதின் இயல்பான பலவீனத்தைச் சமூக வலைதளங்களின் அல்காரிதம்கள் தங்கள் வியாபாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனவோ என்றும் தோன்றுகிறது.
மாறாக, ஏன் பொருளற்ற சர்ச்சைகள், உண்மையற்ற அவதூறுகள், பொறுப்பற்ற உளறல்கள், தன் தகுதிக்கும் குறைவான இழிமொழிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், பொறாமையால் உண்டாகக்கூடிய சொற்கள், குறிப்பாகக் கேலி வதைகள்.
குழாயடிச் சண்டையில் பெண்கள் தன் குடும்பக் கஷ்டங்களைச் சண்டையாக மாற்றி விடுவது போல, சிலர் தங்கள் தனிப்பட்ட வன்மங்களையும் கசப்புகளையும் பொதுவெளியில் கொட்டித் தீர்ப்பதைச் சில சமயங்களில் சகிக்கவே முடியவில்லை.
கல்லூரிகளில் 'ராகிங்' என்று சொல்வார்கள்;
அதுபோல இரண்டு ஆண்டுகள் மூத்த மாணவர்கள் புதியவர்களுக்குச் செய்யும் இம்சைகள்... ‘சீனியர்’ என்ற அதிகாரப் பெயரில் ‘பிராங்க்’ (Prank) செய்து பிறரைப் பயமுறுத்தும் ஆபத்தான விளையாட்டுகள்.
அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள். புலி திடீரென்று வந்து மனிதனைக் கவ்வுகிறது, தண்ணீர் குடிக்கப் போன குழந்தையை முதலை வந்து கவ்வுகிறது.
இவையெல்லாம் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கின்றன;
முகநூல் வீடியோக்களில் பார்க்கப்படுகின்றன. இந்த மனநிலை ஏன் என்று தெரியவில்லை. இது கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.
காலப்போக்கில் இன்ஸ்டாகிராமிற்கு ஒரு தணிக்கைக் குழு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதைத் தடுக்க முடியாது, ஏனென்றால், இதன் முதலாளிகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
எனவே, 'தணிக்கைதான் சிறந்த வழி' என்பதைத் தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்.
இது ஆதரிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களையும் அன்போடு கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN