Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக நடைமேம்பாலம் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே எழும்பூர்–தஞ்சாவூர் மார்க்கத்தில் இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 விரைவு ரயில்களின் சேவைகளில் நாளை முதல் ஆகஸ்ட் 20 வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, கடற்கரை–செங்கல்பட்டு புறநகர் ரயில் தடத்திலும் ஆகஸ்ட் 22 முதல் 30 வரை சில மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து மற்றும் பகுதி நேர இயக்கமாக மாற்றப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 22 முதல் 30 வரை, கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
- கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- கூடுவாஞ்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.15 மற்றும் 11.20 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.20 மற்றும் 11.20 மணிக்கு புறப்படும் ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், ஆகஸ்ட் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 11.20, 11.40, 11.59 மணிக்கு புறப்படும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு 11.00 மற்றும் 11.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இந்த சேவை மாற்றங்களை கருத்தில் கொண்டு, பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ