Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் வசித்து வரும் வயதான தம்பதியை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி அரங்கேறியுள்ளது. இந்த தம்பதியின் இரண்டு மகன்களும் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், தனியாக இருந்த அவர்களை கடந்த ஜூலை 17 ஆம் தேதி மோசடி கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.
தங்களை மும்பை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடி பேர்வழிகள், வீடியோ கால் மூலம் தம்பதியை தொடர்பு கொண்டு, அவர்கள் மீது தீவிர குற்ற வழக்கு உள்ளதாகவும், உடனடியாக டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறி கடுமையாக மிரட்டியுள்ளனர்.
இந்த மிரட்டலால் பீதியடைந்த முதிய தம்பதி, தங்களை காப்பாற்றிக் கொள்ள மோசடி கும்பல் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 1.53 கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர்.
பணத்தை அனுப்பிய பிறகும் மீண்டும் மிரட்டல் வந்ததால் சந்தேகமடைந்த தம்பதி, தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள கோவை சைபர் கிரைம் போலீசார், மும்பை போலீஸ் பெயரில் மிரட்டிய மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் சென்ற வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b