Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ்.மாசிலாமணி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் குறித்து பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடனில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தது தவெக.
அதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யாமல், முதலில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி என்றும், அதற்கு பின் பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களுக்கு பிறகு அடுத்த அறிவிப்பில், ரூ.75,000 வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் பெற்ற தொகையில் வெறும் ரூ.35,000 தள்ளுபடி என்றும் அறிவித்தது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும்.
எனவே, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
மேலும் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக இன்று மதியம் முதல்வரை சந்திக்கவும் அனுமதி கோரியுள்ளோம்.
முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b