கபினி அணை உபரி நீர் எதிரொலி - பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கன அடியாக உயர்வு
தருமபுரி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினா
கபினி


தருமபுரி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இன்று அதிகாலை வரை வினாடிக்கு சுமார் 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை 7.30 மணி நிலவரப்படி 8,000 கன அடியாக உயர்ந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 25,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அதன் முழு தாக்கமும் இன்று மாலை முதல் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

காவிரி நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கும் படிப்படியாக நீர்வரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்தின் அடிப்படையில் அணையின் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam