Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திருச்சூர், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சில பகுதிகளில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், நிலச்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அதிரப்பள்ளி மற்றும் சார்ப்பா நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுகிறது.
அதிகப்படியான நீர்வரத்து மற்றும் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிரப்பள்ளி பகுதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதைகள் மழையால் வழுக்கும் நிலையில் இருப்பதால், ஆற்றங்கரைகள், நீர்நிலைகள் மற்றும் வெள்ளப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மலைப்பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதிகளை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பொன்முடி, நெல்லியம்பதி போன்ற மலைக் கிராமங்களுக்கு மாலை நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA