Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள கல்டலி பகுதியைச் சேர்ந்தவர் காஷ்மிரா ஷேக் (36). பட்டு சேலைகளில் ஜரிகை வேலை செய்து வரும் இவர், தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் பை தைக்கும் தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
காஷ்மிரா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் கல்டலி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். சமீபத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வங்கிக்குச் சென்று தனது கணக்கை சரிபார்த்தார்.
அப்போது அவரது கணக்கில் ரூ.99,99,99,997 இருப்பதாக பதிவாகி இருந்தது. ரூ.100 கோடிக்கு வெறும் ரூ.3 மட்டுமே குறைவாக இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே சமாளிக்க சிரமப்படும் நிலையில், தனது கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வந்தது என்று தெரியாமல் காஷ்மிரா உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கி வைத்து, இந்தப் பெருந்தொகை எவ்வாறு வரவு வைக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடியும் வரை, ஜரிகை வேலைக்காக கிடைக்கும் தனது வழக்கமான சம்பளத்தைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA