பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, நாளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்
பனிமய மாதா பேராலய திருவிழா: தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு


தூத்துக்குடி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, நாளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசு மகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் பனிமய மாதா பேராலய திருவிழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று, பக்தர்கள் வசதிக்காகவும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் அன்னையின் சப்பர பவனி வீதி உலா நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க ஏதுவாகவும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையின் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது என்றும், எனினும் அரசு கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாளை அறிவிக்கப்பட்டுள்ள இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b