Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்யும் புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா–துரைராணி அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் ₹60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், மேலும் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஹக்கிம் அஸ்மல் கான் சாலையில் அமைந்துள்ள அசோதா விலாஸ் மண்டபம் உள்ளிட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக, மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன், பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரப்பதிவு செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறையிடமும் தகவல்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜாவை பெங்களூரில் இருந்து அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P