Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்யும் நோக்கில் புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா–துரைராணி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில், மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன், பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவில் இடம்பெற்ற நபர்களின் அடையாளம் மற்றும் ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறையிடமும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜாவையும் பெங்களூரிலிருந்து அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam