Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே, கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர் கும்பல், 21 வயது இளைஞரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் அடர்ந்த குடியிருப்புகள் உள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக சென்ற 21 வயது இளைஞருடன் தகாத வார்த்தைகளில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, எட்டு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை நடுரோட்டிலேயே சரமாரியாக தாக்கி, கீழே தள்ளி நெஞ்சுப் பகுதியில் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பதறவைக்கும் தாக்குதல் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
படுகாயமடைந்த இளைஞர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே அச்சமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam