Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,
உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!
மேகதாது அணைக்கு எதிராக நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்துகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், அவரைக் கைது செய்த நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை. இவ்விரண்டையும் தவிர்த்திருக்க முடியும்; தவிர்த்திருக்க வேண்டும்.
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
அவை கண்ணியத்திற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் புறம்பானவை. துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒருவர், மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்று மதியம் 12 மணி வரை கைது செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், நாளை சட்டப்பேரவை கூடவுள்ள சூழலில் எதிர்க்கட்சித் தலைவரை இவ்வளவு அவசரமாக கைது செய்தது தேவையற்ற நடவடிக்கையாகும்.
தமிழகத்தின் பல முக்கிய பிரச்சினைகளில் காட்டப்படாத அவசரம், இந்த கைது நடவடிக்கையில் அரசு மற்றும் காவல்துறை காட்டியிருப்பது, இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடனே மேற்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகிறது.
தமிழகம் தற்போது உடனடி கவனம் தேவைப்படும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அவற்றைத் தீர்ப்பதில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இனியாவது இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை எந்த வகையிலும் பாதிக்காதவாறு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN