Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொடர்ந்து சுமார் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகேயுள்ள திருநிலை, அக்கரைப்பாக்கம், பனையஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் முன்அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரவு 11 மணியைக் கடந்தும் மின்விநியோகம் சீராகாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தியடைந்த அவர்கள் சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் அடிக்கடி முன்அறிவிப்பின்றி நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தகவல் கிடைத்தும் நீண்ட நேரமாக அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam