Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
திமுக சார்பில் தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்.
ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை.
அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில், அவரது நீலாங்கரை இல்லத்தை சுற்றி இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு அமைந்துள்ள பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக தஞ்சையை சேர்ந்த காவல்துறையினர் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான காவல் குழுவினர் தற்போது உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நீலாங்கரை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b