Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளார். திருத்தப்பட்ட அலுவல் பட்டியலின்படி இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதா, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்கிறது. மசோதாவை முறையாக தாக்கல் செய்வதற்கு முன், அதனை அறிமுகப்படுத்த அவைக்கு அனுமதி கோருவார்.
மேலும், வருமான வரி (திருத்த) அவசரச் சட்டம் 2026 (2026-ம் ஆண்டின் 2-ம் எண் அவசரச் சட்டம்) மூலம் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கான காரணங்களை விளக்கும் அறிக்கையை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவை முன் வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டுக்கான அதிகப்படியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை மக்களவை பரிசீலிக்கும். விவாதத்திற்குப் பிறகு, நிர்மலா சீதாராமன் ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2026-ஐ தாக்கல் செய்வார்.
இந்த மசோதா, 2023 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், முதலில் அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவிடப்பட்ட தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோருகிறது. பின்னர் அவர் மசோதாவை பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருவார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களின் அறிக்கைகளையும் அவை கேட்கும். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தொடர்பான பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதாவும், நில வளங்கள் துறை தொடர்பான பரிந்துரைகள் குறித்து இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானியும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை தொடர்பான பரிந்துரைகள் குறித்து இணை அமைச்சர் பகிரத் சவுத்ரியும் பேசுவார்கள்.
மேலும், வங்கியாளர் புத்தகங்கள் சாட்சிய சட்ட மசோதா, 2026-ம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தற்போதைய டிஜிட்டல் வங்கி நடைமுறைகளுக்கு ஏற்ப வங்கியாளர் புத்தகங்கள் தொடர்பான சாட்சியங்களுக்கான சட்ட கட்டமைப்பை நவீனப்படுத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சி நிரலில் மீதமுள்ள சட்டப் பணிகளைத் தொடர்வதற்கு முன்,
விதி 377-ன் கீழ் வரும் விவகாரங்களும் இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / vidya.b