முதல் முழுமையான பட்ஜெட்டுக்கு முன் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரி
தவெக


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றை மக்களிடம் எவ்வாறு விளக்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போதும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களின்போதும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒரே நிலைப்பாட்டுடன் செயல்படுவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தரவுகளுடன் பதிலளிப்பது, அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை வலுவாக எடுத்துரைப்பது தொடர்பாகவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், சட்டப்பேரவை ஒழுங்கு, உறுப்பினர்களின் பங்கேற்பு, தொகுதி வாரியான முக்கிய கோரிக்கைகள், அரசுத் திட்டங்களின் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம், ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை வியூகம் மற்றும் அரசின் அடுத்தகட்ட செயல்திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கியக் கூட்டமாகக் கருதப்படுகிறது.

முன்னதாகவும் முக்கிய அரசியல் சூழல்களில் பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam