Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெண்களின் கண்ணியத்தை புண்படுத்தும் பேச்சு ஏற்க முடியாது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்!
பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும்.
ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது.
தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள்.
அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசப்படும் எந்தவொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே அவமதிப்பதாகும். பெண்களை மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்களின் மனதை மதிக்கவும் தெரியாது என்பதை இத்தகைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.
பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழிக்கு தமிழ்நாட்டின் பெண்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள்.
உதயநிதி அவர்களின் இந்த ஆபாசப் பேச்சுக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் தலைவரின் கடமையாகும்.
அந்தப் பொறுப்பை மீறும் எந்தப் பேச்சும் மக்கள் மன்றத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே....
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam