வேடசந்தூர் பள்ளி குடிநீர் தொட்டி விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் சமூக வலை
Vanathi srinivasan


Ub


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சமூக நீதி எங்கே? பெயரை மட்டும் மாற்றினால் போதுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீரில் மலக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்திய அவர், அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படும் தகவல் தமிழகத்தையே உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல நூறு மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளியில், சமூக விரோதிகள் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ள அவர், சமூக நீதித்துறை என்று துறையின் பெயரை மட்டும் மாற்றினால் மாற்றம் ஏற்படாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகளே உண்மையான மாற்றத்தை உருவாக்கும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வானதி சீனிவாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, சம்பவம் தொடர்பாக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ