Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (30). என்பவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வந்துள்ளார்.
பின்னர், மனைவியைப் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, விருதுநகர் செல்வதற்காக விக்கிரமசிங்கபுரம், கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சொரிமுத்து நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென அவரை சுற்றி வளைத்து கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சொரிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சமுத்திரக்கனி உள்ளிட்ட போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து சொரிமுத்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோடிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் 30 வயது இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b