Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் பின்தங்கிய மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதி சமமாக கிடைக்க வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
ராஜ்யசபாவில் தாம் எழுப்பிய CSR நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலை மேற்கோள் காட்டியுள்ளார்.
அதில், CSR நிதியை எந்த மாநிலம், மாவட்டம் அல்லது குறிப்பிட்ட திட்டத்திற்கு செலவிட வேண்டும் என்று மத்திய அரசு நிறுவனங்களை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில், தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் CSR நிதியாக 2022–23 ஆம் ஆண்டில் ₹1,641.23 கோடி, 2023–24 ஆம் ஆண்டில் ₹2,055.31 கோடி மற்றும் 2024–25 ஆம் ஆண்டில் ₹2,738.49 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலில் குறிப்பிட்டுள்ளதாக இன்பதுரை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பின்தங்கிய மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு CSR நிதி சமமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ