ஆன்லைன் மதுபான முன்பதிவு திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக்
அன்புமணி


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை ஆகஸ்ட் 6 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுவகைகள், அவற்றின் விலை உள்ளிட்ட விவரங்களை அறிந்து ஆன்லைனில் முன்பதிவு செய்து, கியூஆர் குறியீடு

(QR Code) மூலம் சம்பந்தப்பட்ட கடையில் மதுபானங்களை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுக்கடைகளில் வரிசையை குறைப்பது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனையை தடுப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், இது நடைமுறையில் மதுபான விற்பனையையும், மதுப்பழக்கத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்வி, மருத்துவம், வேளாண்மை, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில், மதுவிற்பனையை எளிதாக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்துவது சமூக நலனுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் முன்பதிவு நடைமுறையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மதுப்பழக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனையை தடுக்க முடியாதது அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 717 டாஸ்மாக் கடைகளை மூடிய நடவடிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதற்கு முரணாக ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பொருத்தமற்றது என்றும், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam