அக்டோபரில் டிஎஸ்சி அறிவிப்பு டிசம்பரில் தேர்வு -அமைச்சர் லோகேஷ்
அமராவதி , 05 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) இன்று தொடங்கியது. இதையொட்டி, தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
A


அமராவதி , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) இன்று தொடங்கியது. இதையொட்டி, தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேர்வர்கள் எவ்வித பதற்றத்துக்கும் இடம் கொடுக்காமல் நம்பிக்கையுடன் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் நடைபெறும் டெட் தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகின்றன என்றும், தேர்வர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாரா லோகேஷ் கூறினார்.

மேலும், அரசு அறிவித்த வேலைவாய்ப்பு கால அட்டவணையின்படி அடுத்த டிஎஸ்சி (ஆசிரியர் தேர்வு) பணிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

அதன்படி, வரும் அக்டோபர் மாதத்தில் டிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

ஏற்கனவே 16,347 ஆசிரியர் பணியிடங்களுக்கான மெகா டிஎஸ்சி தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA