Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
வீடு வாங்க விரும்புவோர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான 'ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா' ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவை கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார், செயலாளர் சஞ்சனா விஜயகுமார் மற்றும் பொருளாளர் மற்றும் ஃபேர்ப்ரோ 2026 தலைவர் கார்த்திக் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கண்காட்சியில் கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்க விரும்புவோர் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதியுள்ள குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், உயர்தர மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னணி வங்கிகளும் பங்கேற்பதால், வீட்டுக் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும், உடனடி நிதி ஆலோசனைகளைப் பெறவும், தங்களுக்கு ஏற்ற கடன் திட்டத்தைத் தேர்வு செய்து சொத்து வாங்கும் முடிவை எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களில் மட்டுமே சிறப்பு ஃபேர்ப்ரோ சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக கூறினர்.
80-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கட்டுமான நிறுவனங்களை கொண்டுள்ள கோவை கிரெடாய், திட்டமிட்ட நகர வளர்ச்சி, நெறிமுறை சார்ந்த கட்டுமான நடைமுறைகள், அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வீடு வாங்குவோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P