Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 2026–27 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாரம்பரிய மீனவர் குடும்பங்களுக்கு மாநில அரசு தற்போது வழங்கி வரும் பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகை ₹6,000-லிருந்து ₹7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 1.93 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடைய உள்ளன. இதற்காக ₹135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், நவீன பதப்படுத்தும் வசதிகளுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வாங்கும் மீனவர்களுக்கு வட்டி மானியமாக நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நடப்பாண்டில் ₹12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்கால நிவாரணம், மானிய விலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்குதல், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் பண்ணைகள், கடல் அரிப்பைத் தடுக்கும் தூண்டில் வளைவுகள் மற்றும் அலைத் தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ