ஆடிப்பெருக்கு திருநாளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் குவிந்த மக்கள் - ஒரே நாளில் அரசுக்கு ரூ.172 கோடி வருவாய்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பெருக்கு திருநாள், பத்திரப்பதிவுத் துறைக்கு மிகப்பெரிய வருவாயை அள்ளிக் கொடுத்துள்ளது. நீர்நிலைகளையும், விவசாயத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படும்
ஆடிப்பெருக்கு திருநாளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் குவிந்த மக்கள் - ஒரே நாளில் அரசுக்கு ரூ.172 கோடி வருவாய்


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பெருக்கு திருநாள், பத்திரப்பதிவுத் துறைக்கு மிகப்பெரிய வருவாயை அள்ளிக் கொடுத்துள்ளது.

நீர்நிலைகளையும், விவசாயத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த மங்கள நாளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 575-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் அமோகமாக நடைபெற்றன.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி,

ஆடிப்பெருக்கு தினமான நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 16,946 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் வாயிலாக மொத்தம் ரூ.172 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் ஒரு சாதாரண வேலை நாளில் சராசரியாக 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகும். அதன் மூலம் சுமார் 95 முதல் 100 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். ஆனால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சொத்து வாங்குவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்ததால், சாதாரண நாளை விட கூடுதலாக ரூ.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் என்பது பொதுவாக சுபகாரியங்களை தவிர்க்கும் மாதமாக பார்க்கப்பட்டாலும், ஆடிப்பெருக்கு மட்டும் அதற்கு விதிவிலக்கு. காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் செய்யப்படும் முதலீடுகள், செல்வம் பெருக வழிவகுக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் வீடு, மனை, நிலம் வாங்குவதற்கு இந்த நாளை பலரும் தேர்வு செய்கின்றனர்.

மக்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, பணியாளர்கள் முழு வீச்சில் பணியாற்றியதாகவும் தெரிகிறது.

குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள பதிவு அலுவலகங்களில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்திரங்களை பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b