Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
அதேநேரத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் கொசுத் தொல்லையும் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மும்பையில் கடந்த ஜூன் மாதத்தில் 655 ஆக இருந்த மலேரியா பாதிப்பு, ஜூலை மாதத்தில் 1,380 ஆக உயர்ந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
அதேபோல், ஜூன் மாதத்தில் 266 ஆக பதிவான டெங்கு பாதிப்பு, ஜூலை மாதத்தில் 466 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், எலிக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதே கொசுக்கள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை மிகவும் கடுமையாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி, புகைமருந்து தெளித்தல், லார்வா ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தடுப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA