ஜவுளித் துறைக்கு புதிய ஊக்கம் - தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம், பனை மேம்பாட்டுக் கழகம், திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அறிவிப்பு
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜவுளி, கைத்தறி, கைவினை மற்றும் பனை சார்ந்த தொழில்களை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 2026–27 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஜவுளி, ஆடை, கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளுக்கான வடி
Maria


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜவுளி, கைத்தறி, கைவினை மற்றும் பனை சார்ந்த தொழில்களை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 2026–27 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜவுளி, ஆடை, கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளுக்கான வடிவமைப்புக் கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் ₹60 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம்

(Tamil Nadu Institute of Design) மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

மேலும், தொழில்நுட்ப ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், சந்தை நுண்ணறிவு, புத்தாக்க ஆதரவு மற்றும் தொழில் வழிகாட்டுதல் வழங்கப்படும்.

பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ₹16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும். பதநீர் பதப்படுத்துதல், பனங்கருப்பட்டி உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்களின் ஏற்றுமதி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அதேபோல், திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைவழி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ₹10 கோடி நிதியில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும்.

மேலும், 2026–27 திருத்த வரவு–செலவுத் திட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு மொத்தம் ₹1,678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ