தமிழக பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அ
G


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி உள்ளிட்ட சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தெளிவான திட்டங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்பும் இல்லை என்றும், குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தியிருப்பதும், மூத்த குடிமக்களுக்காக 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் என பாராட்டியுள்ளார்.

பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் தேர்தல் வாக்குறுதியும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அரசு ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் புதிய நடைமுறையை வரவேற்றாலும், பணிகளின் தரத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டம், உயர்கல்விக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில் பிரிவுகள், மின்சார வாகன ஊக்குவிப்பு, 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்கும் திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்குவதாக அறிவித்தும், அதற்காக ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மொத்தத்தில், சில துறைகளில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் இருந்தாலும், பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam